Monday, February 4, 2013

ஒரு பொய் பற்றிய உண்மைகள்


மனதை எவ்வளவுக்கெவ்வளவு 
அழுக்காக்கி விடுகிறோமோ 
அவ்வளவுக்கவ்வளவு 
உதடுகளை அழகாக்கி விட்டு
பொய்யொன்றை சொல்ல ஆரம்பிக்கலாம் 

பொய்கள் மூன்று வகைப்படும் 
நம்பக்கூடியது,நம்பக்கூடியது,நம்பக்கூடியது
மூன்றை பற்றிய விளக்கம் உங்களிடமிருந்தால் 
நீங்கள் ஒரு தலைசிறந்த பொய்காரனாகும் 
வாய்ப்பு பிரகாசிக்கும் 

பொய்கள் பற்றிய விளக்கங்கள் அறிய 
நாடவேண்டிய இடங்கள் 
காதலர் கடலை போடும் கடற்கரைகள் 
பீச் பார்க் சினிமா 
பொதுவாக பொதுவான இடங்கள் 

அழகில்லா பெண் பற்றிய பொய்யொன்றை 
திருமண தரகரிடமும் 
அழகான பெண்பற்றிய பொய்யொன்றை 
அவள் நண்பியிடமும் 
அறிந்துகொள்ளப்பழகுங்கள் 
அர்த்தமுள்ள பொய்யொன்றை 
மானமுள்ள ஏழையிடமும் 
அவசரப் பொய்யொன்றை 
அயல் வீட்டுக்காரனிடமும் அறியலாம் 

ஆவலேற்றும் பொய்யொன்றை 
அரசியல்வாதியிடமும் 
பெருமை பற்றிய பொய்யை 
சினிமா நடிகனிடமும் 
அலைச்சல் தரும் பொய்யை 
கடனாளியிடமும் 
எரிச்சல் தரும் பொய்யொன்றை 
எதிரியிடமும் பெற்றுக்கொள்ளலாம் 

பொய்களின் தத்துவம் இரண்டு வகைப்படும் 
இனிக்கச்சொல்லுதல்,இனிக்கச்சொல்லுதல் 
கணவன் பற்றிய மிகச் சிறந்த 
கேவலமான பொய்களை பெண்களும் 
மனைவி பற்றிய மணிமணியான 
பொய்களை ஆண்களும் 
எதிர்பார்க்கின்றார்கள் 
நிறைந்த எதிர்பார்ப்புக்கள் பொய்களின் உயிராகின்றது 

பொய்கள் சுயநலமானவை 
உங்களுக்கான பொய்கள் உங்களிடமிருந்தே 
ஆரம்பிக்கின்றன 
சுதந்திரம் பற்றிய பொய்களை தமிழரிடமும் 
சமத்துவம் பற்றிய பொய்களை பெண்களிடமும் 
சொல்லுங்கள் சந்தோசப்படுவார்கள் 

இப்போதும் உங்களால் 
பொய்சொல்ல இயலவில்லை எனின் 
கொஞ்சமாவது என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் 
அப்போது தான் நீங்கள் 
பூரணமான மனிதன் என்பது உறுதியாகும்
 

நீ,நான், நாம்,அது.


நீ
மதுக்கோப்பை நிரம்பி வழிய 
குமைந்த உதடுகளால் பச்சை முத்தமொன்றை 
ஒற்றைப் பிசுபிசுப்பை 
ஞானியாதல் பற்றிய விளக்கத்தை தருகிறாய் 
ஞானமென்பது முத்தம் இறந்த இடத்தில் முதிர்வது 

நீயென்றால் நீயாகவும் இருக்கலாம் 

நான் 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
மாறுமுன் காத்திரமான அலைவுகட்குள் 
ஜீவிதமுற்றுக் கிடக்கின்றேன் 
இடைவெளிகளை நிரப்ப இடைவெளிகளை 
எடுத்துவருகின்றேன் 
வெறுமையின் இருப்புகட்குள் படர்ந்துயிர்க்கின்றேன் 

நானென்றால் நானாகவும் இருக்கலாம் 

நாம் 
உதடுகளுக்கு காது முளைக்கையில் 
மீண்டும் சூன்யவெளிக்குள் மறைகின்றோம் 

அது 
இங்கும் அங்கும் 
இல்லாத இடமொன்றில் இருக்கின்றது 
இப்போது அவ்விடத்தில் 
நீயும் நானும் இல்லை

உயிரைப் போலொரு வலி


காதலெனும் புத்தகத்தை இரவல் வாங்கிப் 
படிக்க வந்தவள் போல் நீ 
உன் வேதனை நிரம்பி வழியும் 
திருவிழாக் கூட்டம் போல் நான் 
நீயே கடவுளாகிறாய் 
உயிராகிறாய் 
பேருருவாய் வளர்ந்து எனை தின்கிறாய் 

வெற்று உயிராகி நானே 
காவுகொள்ளென்று காத்திருக்கிறேன் 
சொற்கொலை 
மண்டியிட்டு முகம் புதைத்து 
அதே கூட்டத்தில் நானுமிருக்கிறேன் 
நீயுமிருக்கிறாய் அதுவுமிருக்கிறது 

அதுவென்றால் எது ?
இது ....
 

எதிர்பார்ப்பு


உயிருடன் இறந்து விடுதல் பற்றிய குறிப்பொன்றை 
நீங்கள் எழுத முயற்சித்திருக்கலாம் 
நானும் அந்த முயற்சியில் 
தோற்றிருக்கிறேன் பலமுறை முயன்று,
ஒரு ரணத்துடன் 
ஒரு மிகப்பெரும் வலியுடன் நீங்கள் வாழமுடியுமெனின் 
அப்படியான குறிப்பொன்றை எழுத முயற்சியுங்கள் 
அப்போதும் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் 

நீங்கள் ஒரு கவிதையை எழுத முயற்சியுங்கள் 
ஒரு தேடல் பற்றிய விளக்கம் உங்களிடம் இருந்தால் 
ஆரம்பிக்கலாம் 
அது மிகவும் இலகுவானதொன்று 
ஒரு கவிதையை கவிஞன் தான் 
எழுத வேண்டுமென்றில்லை 
குழந்தை கூட அழுகிறதே 

நீங்களும் என்னைப்போல் காதலிக்க ஆசைப்பட்டிருக்கலாம் 
காதல் பற்றிய இலவச குறிப்புக்கள் 
கசாப்புக்கடையிலே வழங்கப்படுகின்றன,இருந்தும் 
காதலின் தெய்வம் கசாப்புக் கடைக்காரனென்றால் 
உங்கள் ஊகம் தவறானது 

நீங்கள் குழந்தையாவதை பற்றிக் 
கற்றுக் கொள்வதென்றால் என்னிடம் வாருங்கள் 
நான் உங்களுக்கு சொல்லிதருவதற்காய் அல்ல 
நானும் கற்றுக்கொள்ள 
ஆசைப்படுகின்றேன் 

மரணம் பற்றி உங்களை விட நான் தெரிந்து கொள்ள 
விரும்புகின்றேன் 
காரணம் எனக்கு வாழப்பிடித்திருக்கிறது.

இந்த கவிதை பற்றி என்னிடம் நீங்கள் விளக்கம் 
கேட்டால் நிச்சயம் தோற்றுப்போவீர்கள் 
காரணம் இது கவிதையில்லை
 

என் நினைவுகள் 
புணர்ந்த இரவுகள் 
பிரசவிக்கும் 
அழகிய கனவு நீ 

உன் உதடுகளை 
பிழிந்தேன் 
கிடைத்தது 
உயிரின் சுவை 

வா பெண்ணே 
மேகத்தின் நிழலில் 
இளைப்பாறுவோம்

கிளிச்.... உதடுகளின் அசைவுகள்


துளிகளின் சத்தத்துடன் இசைகிறது 
ஒரு புன்னகை 
குழந்தையொன்றின் மிழற்றலாயும் 
இறை துயிலொன்றின் நிச்சலனமாயும்

மீண்டும் ஒரு புன்னகை 
மேகத்தைப் பிளந்து வருகின்றது 
மண்ணின் உயிர்வாடை வீ சத்தொடங்கியது 
வெம்பிய கனவுகளுடன் ஈரத்தில் 
ஒட்டியும் ஒட்டாமலும் 

அடுத்து மிகப்பெரிய சிரிப்பொலி 
காலத்தின் துயரொலித்த பாடல் 
பீரங்கி முழக்கமாயும் தோட்டா அலறலாயும் 
அனாதைகளின் கூடாரத்தை நனைக்கிறது-இது
கடவுளின் கவனயீனம் 

இப்போது ஒரு மௌனிப்பு 
உலகமே ஈரம் சுகித்துக்கிடக்கின்றது 
காலச்சக்கரத்தின் ஒருமுனையில் மரங்களின் 
புத்தாண்டு 
மறுமுனையில் ஏழை ஒருவனின் கண்ணீர்துளிகள்
 

மூன்று முத்தங்கள்


 இச்....
மௌனம்
ஒட்டிக்கொள்கிறது இன்பப்பிசுபிசுப்பு 
நச்சென்ற சுவை

இச்...இச்...
மூச்சுப் பிரளயத்தின் ஆராதனை 
உதடுகளின் திரையைக் கிழித்தெறிந்தாய் 
உயிரின் சாம்பல் காலடியில் வீழ 
இதழ்ப் பிளவுகட்குள் 
நினைவுகளின் தூசி

இச்..இச்...இச்...
விழிகளை மெல்ல மூடி 
கன்னங்களை அர்ச்சித்து விட்டு நகர்கிறாய் 
தகனம் வியர்க்கும் வெயிலை 
அள்ளிப் பூசிக்கொள்கிறேன் உடலெங்கும் 
அரவமில்லாப் பொழுதொன்றில் 
தப்பிய வார்த்தைகளை சாகடிக்கத் தயாரானாய் 
இனி நான்காவது முத்தம்.....