கஸலிஷா


கஸலிஷா(1)
(சாத்தான் கண் பூத்தவள் )


பித்தன் 
யாசிக்கப்படலாம் 
ஏதேன் தோட்டம் 
மறுபடி ஓர் முறை-சாத்தான்
கண் நேசிக்கப்படலாம்

கஸலிஷா
யுத்தஓசை-மரணத்தில்
முழங்கும் பிடில் 
எங்கும் மயான அமைதி 
அவள் மட்டும்
உயிர் வெளிக்கும் இசை ...

தங்கத் தூரிகைகள்
பிளந்து வெடித்து
துமித்த
வர்ணஜாலமவள்
இறைகணக்கில் 
சேர்க்கப்படா மானுடப்பிறவி 

மீண்டும் 
அச்செம்பழத் தீயில்
சிக்கிக்கொண்டேன் யான்...!!
பூக்களுக்கு 
அவள் தந்த 
ஒளி நிறைந்த முத்தத்தில்
இதயம் பூத்தது...!!

(காதலுக்கு சேவை செய்கின்ற மனிதருக்கு உண்மையுள்ள 
தேவதைகள் உதவி செய்கின்றார்கள்-லவ்பிரேயர் 1:1,01)
(காதலாகமத்திலிருந்து-)





கஸலிஷா பெண்ணானவள் (-2 -)(கடவுள் உரைத்தல்)
திரணம் மேல் பனித்
துகள்கள்
கொஞ்சிடும் வைகறையில்
அவள் மலர்ந்தாள்
மரணமோ எனைப்
பிடித்தது என்று அஞ்சினேன்
அரை நிமிடம் ...!!!


கடவுளாகிய  கலைஞன்
நான்...!!
எங்கே எனக்குள்ளும்
பல்லவி சரணங்களை
பொழிகிறது
காதல் கார்மேகம் ...!!


மெல்லியாள் யாரிவளோ?
துடித்திடும்
ஆண்மையை சீண்டிய
பெருநில மங்கை
இவள்
பாலையோ?முல்லையோ?


இந்திரியம்
சொட்டவைக்கும்-அவள்
பாதிரப்பூ வாசம்
மந்திரமோ-இல்லை
நான் தான்
யந்திரமோ...??


குரல் விக்கி...
மூச்சு திக்கி...நான்
கடவுளானவன்
கஸலிஷா
பெண்ணானவள்....!!


(காதலில் உறுதியாய்த் தரித்திருங்கள்
இடை விடாமல் காதல் செய்யுங்கள்-பேறு18:1, சிறவு12:12:1)




கஸலிஷா இயற்கை புனைந்தவள்(3)(சாத்தான் உண்மை அறிதல்)


மேகத்திரள் உடைத்துப்
பாய்ந்திடும் மழைத்துளியாய்
சோர்ந்திடும்
மனவெளியில்
விழி ஒளிர்த்தாள்...!!

தேனும் தினையும்
குழைந்திடும் பகல்உணவாய்
விளைந்திடும்
கனி இதழால்...!!
உயிர் கிழித்தாள்..!!

தேக்கு மர உடலாள்
பூக்க மறுத்தாள்-எனை
நோக்க மறுத்தாள்
காகோதரம் -என்றெனை
அஞ்சியே
வெறுத்தாள்...!!

நித்திய ஜீவன்-ஆகப்
பார்த்தான் -இவள்
புத்தியும் மங்கிடும்
நான் சாத்தான் ....!!
கஸலிஷா
எனை வெறுத்தாள்...!!
காரணம்-கயவன்
நீயென்றாள்...?

அவள் இயற்கை புனைந்தவள்.....!!

நான் இறக்கை இழந்தவன்...?

(காதலை அபிசேகப்படுத்துங்கள் உங்கள் மனம்பரிசுத்தமடையும்-நெதி1;17 பிரை6:12)



கஸலிஷா காற்றின் கனவு (4)(இறை ஆசை )




குடஜமலர் சூடி குவளை
மலர் ஏந்திக் -குதித்தாடும்
பாதங்களில்
விடயமொன்று தேடியே
வாழ்ந்தேனுயிர் ....!!



அகில் மரங்கள்-துகில்உரித்து...பச்சை களைந்து செந்துணர் ஜொலிக்கும்
அவள் பூவிடை
செர்ந்தேனுயிர் ...!!

பெருஞ்செடிவேர்
வளைந்து நின்று யாழாகும்
குன்றிமணி தெறிக்கும்
அவள் இசைக்கும் -விரல்நுனி
சார்ந்தேனுயிர்...!!

மாவிலைக் கச்சிடையே
பஞ்சு மேகமிரண்டும்
கொஞ்சிக்கொள்ளும்
வியர்வைத்துளி நீராய்ப்
படரக்
குளித்தேனுயிர்....!!

இறை காதலுணரா
கஸலிஷா காற்றின்
கனவு-இறையிவன்
நேற்றின்
உணர்வு...!!!

(துன்பங்களின் கண்ணீரை காதல் துடைக்கும் .இனி
மரணமும் இல்லை....துக்கமில்லை...அலறுதலுமில்லை
வருத்தமுமில்லை-உணர்தல்08:12)


கஸலிஷா-ஐம்பூத அணிமகள் (5)
(இறைவன் காதலுரைத்தல்)

கைக்கிளை மருவிய கறையற்ற
காதலால்-சொற்கிளை 
ஒன்றெடுத்து வந்த 
தென்றலும் பாறையும்
சிக்கி முக்கித் தீ தோன்றும்..!!

திக்கிய சொல்லொன்று
உயிர் வெடித்துக் கக்கிய
நொடியிலே
உக்கிய உணர்வொன்று
மறுநொடி சுவை தர-தேன்
நீர் வந்து நிலம் தீண்டும்

தாக்கிய உளி முனையாய்
மனம் செதுக்கி
தேக்கிய அவள் எண்ணம்
பூக்களிலே இதழோரம்
வார்த்தைத் துளி சிந்தும்-உரை
உரப்பு ஆகாயம் தாண்டும்

சொற்கொண்ட ஆசை ...
வெளித்த கணம் -அவள்
கெண்டைப் பாதம் -நாணத்தால்
வேகப்படும் ...உணராத அவள்
மனதில் புலராத காதலால்
இரும்பொன்றில் தீக்காற்று மீண்டும் ...

கஸலிஷா...இதயம்
உடைத்தவள் -இறையிவன்
இருந்தும் இறந்தவன்


(உண்மையான காதலிடம் அச்சம் கொள்ளத் தேவையில்லை
அது அரவணைக்கும் அன்னையாகவும் ...அறிவுரைக்கும் தந்தையாகவும்
பண்பூட்டும் ஆசானாகவும் பரலோகம் காட்டும் இறையாகவும் இருக்கும்
காதலை தியானியுங்கள்
சிலுவைகள் சுகப்படும்-லப்பிறேயர் 4;1உயிர் 1;1)

2 comments: