திட்டித் தீர்க்கின்றாய்


திட்டித் தீர்க்கிறாய் 
(ஆணவ அஸ்தமிப்பு)             


திட்டித் தீர்க்கிறாய்
அந்தத் 
திட்டல்களில் 
நான் தொலைகின்றேன் ...!!

மேலும் 
மேலும்
உன் வார்த்தைகளில் 
தொக்கி நிற்கின்றது மனம் 

ஏதேதோ 
எதிர்பார்ப்புக்களுடன் -என்
மௌனத்தின் 
ஓசைலயம் தெறிக்கின்றது...

ஒவ்வொரு சொற்களும் 
என் இதயத்தை 
துளைத்து 
இசைக்கின்றது 
புல்லாங்குழலாக்கி ....!!

மேலும் ....
மேலும் ...
திட்டித் தீர்க்கிறாய் 
சமுத்திர அந்தத்தில் 
ஆணவம் தொலைக்கும் 
சூரியக் கீற்றுக்களாய்
நான் 
அஸ்தமிக்கின்றேன்...!!






திட்டித் தீர்க்கின்றாய்-(2) 
(சலாகை உயிர்ப்பு)

                                              
திட்டித் தீர்க்கின்றாய் 
செல்லம் 
செல்லமாய் 
செறிந்த மதுரசத்தின்
மெய்மறப்பில்
கிறங்கிப் போய் நிற்கின்றேன் 

மேலும் 
மேலும்
செல்லமாய் 
பனிநடனம் புரிகின்றாய் 
நான் உறைந்து போய் 
ஏதோ
சாதிக்கத் துடிக்கும் 
உன் விழி மொத்தத்திலும் -என்
சரித்திரம் தொலைக்கின்றேன் 

கொஞ்சலாய் 
மிஞ்சலாய்
திட்டித் தீர்க்கின்றாய் 
ஏதோ மார்க்கமாய் 
மெதுவாய் 
உயிருக்குள் 
நுழைந்திருக்கிறது
உன் வார்த்தை 

சிறிய சொற்பரப்பில்
பரந்து
எரிகின்றாய் 
எரிதலில் பிறந்தன
ஒட்டிய இரட்டை இதயங்கள் 

மேலும் ....
மேலும் ........
திட்டித்தீர்க்கின்றாய் 
செல்லமாய் ....
நான் மரத்துப் போகின்றேன் 
சலாகைகளாய்....??




திட்டித் தீர்க்கின்றாய் (-3-)(நெருப்பின் பிறப்பு)


திட்டித் தீர்க்கின்றாய்
சத்தம்
சத்தமாய்....
உன் சிவந்து வெடித்த 
விழிப்பரப்பில்
மெல்ல ஒட்டிக் கொள்கிறது 
என் ஆண்மை ....!!!

வெட்டிச் சாய்க்கின்றாய்
கொஞ்சம் 
அனல் கலந்த 
உதடுகளின் அசைவில்
வேக 
வேகமாய் ...??

எரிமலையாய்க் 
கொப்பளிக்கின்றாய் ...!!
வெடைக்கோழியாய்க்
கொக்கரிக்கின்றாய்...??

எதற்காய் ..??
ஏன்..?
கொஞ்சம் 
மௌனமாகிறாய் 
உன் 
பேச்சுக்களில் 
தொடங்கிய 
நெருப்பின் பிறப்பு 
நின்றுவிடப் போகின்றதே ...!!

திட்டிக் கொண்டேயிரு
சுகமாய்
இருக்கிறது...!!





திட்டித் தீர்க்கின்றாய்(-4-)(திட்டல்கள் தீராது...)


திட்டித் தீர்க்கின்றாய் 
ஆசையுடன் 
பாசமாய்...!!

உச்ச செவிப்பறை
நாண்களை
மிச்சமின்றி அதிரச் 
செய்கிறாய் 

அந்தத் திட்டல்களில் 
நீயும்
கொஞ்சல் அதிரசமாய் 
இனிக்கிறாய் 
தொடர்கிறாய் 

எதிர்பாராப் பொழுதுகளில் 
யாசகனுக்கு 
அதிர்ஷ்டம் அடித்தால்
எப்படியிருக்கும்...!!
ம்ம்ம்.....தொடரு 
உன் திட்டல்களை                       

வார்த்தை 
முத்துக்களை விழுங்கி 
சிப்பியாகிப் போகின்றன 
என் 
சின்னச் செவிகள் 

திட்டிவிடு 
திட்டிவிடு...
திட்டிக்கொண்டே
உன் அக்கறைகளை 
என் மேல் கொட்டிவிடு...!!

நிறுத்தாதே 
மூச்சு வெடித்து
நான் முழுமையாகிறேன்
திட்டிவிடு....!!!


 திட்டித் தீர்க்கின்றாய்(-5-)

(தென்றல் வீச்சு)


புயல் தரும் வேகத்தில்
கர்வமாய்
காந்தமாய்
என் மேல்
பெண்மையைக்
கொட்டிவிடுகின்றாய் ....

கண்களில்
ஒரு நொடியில் பாச
மலர்களை
மொட்டு வெடிக்க
வைக்கின்றாய்...!!!

திட்டித் தீர்க்கின்றாய்
தெளிந்த வானம்
சிவந்து
அந்தி சாயும்
வண்ணங்களில்
விழிகளை மாற்றி

கன்னங்களும்
சிவக்கின்றது....!!

திட்டித் தீர்க்கின்றாய்
சரம் சரமாய்
வார்த்தைகளைக்
கோர்த்து......
மீண்டும்
வீசத் தொடங்கியிருக்கிறது
பாசத் தென்றல்...!!!

 திட்டித் தீர்க்கின்றாய் (-6-)

(திட்டல் சுவை)


பரவசத் திட்டல்கள்
பிறக்கின்றன ...!!!

உன் திட்டல் மார்க்கம்
புனிதமானது
புதினமானது...!!
நால் வகையில் நா
இசைக்கின்றாய் ...

கொஞ்சல் திட்டல்
மிஞ்சல் திட்டல்
கோபத் திட்டல்
கண்ணால் கண்ணை
எரித்துவிடுவதைப் போல்
சபதமிட்டுத் திட்டுவாயே-அந்த
மௌனத் திட்டல் ..!!

திட்டித் தீர்க்கின்றாய்
எங்கே கற்றுக்கொண்டாய்
சொற்களால்
இதயத்தில் சுழியோட ..!!

திட்டல் சுவை பிறக்கின்றது
என்
புசிப்புகள் அடங்கி
விடவில்லை ....
எச்சில் விழுங்கல்
நின்றபாடில்லை...!!

திட்டித் தீர்க்கின்றாய்(-7-)
(அழகியல்)

திட்டல் 
சுவாசம் தொடங்கியது 


உன் திட்டல்கள்
என் விழிப்புகளை
கொஞ்சம் கொஞ்சமாய்
விழுங்கின...
நான் செய்கிறாய் நீ..!!


இம்சைகளை

மறைத்து

அகிம்சை தொடர்கிறது

அமைதியான

ஆர்ப்பரிப்பது...!!!



ரசனை மிகுந்த

திட்டல்கள் அவை
ஒவ்வொன்றும்
காற்று விழுங்கிய
கவிதை...!!

திட்டித் தீர்க்கின்றாய்
திட்டல்களையும்
அழகென்கிறது
உன்
அழகியல் சரித்திரம்..!!




திட்டித் தீர்க்கின்றாய்(-8-)
(எட்டாம் ஸ்வரம்)

மூச்சு வாங்கல்களில்
மௌனிக்கின்றாய்

அந்நொடி-நான்

மீண்டும் ஒரு கணம்

ஜனனிக்கின்றேன்



ரசனை மிக்க

திட்டல்கள்

காவியம் சொல்லுமா...??


எட்டாவது ஸ்வரம்
சொல்லும்
திட்டல்கள் ஒவ்வொன்றும்
தீக்குள் பிறந்த பனிச்சுவாசம்

திட்டித்தீர்க்கின்றாய்..!!
பெண்ணே
உதடுகள் சுழித்து....
ஒவ்வொரு சுழிப்பிலும்
உன்
வெட்கம் வெளிக்கின்றது

மூக்கை -நீ
கண்களுடன்
இறுக்கிக் கொண்டு
மௌனமாகும் வேளையிலே-என்
பாசம்
இறுக்கிக் கொண்டதுன்
ஆவியிலே...!!

ஸ்வரங்கள் பிறக்கின்றது
மௌனத் திட்டல்கள்
கடினமானதல்ல
கவிதையானது...!!



திட்டித் தீர்க்கின்றாய் (-9 -)
(திட்டல்கள் திகட்டாது)

சுள்ளிடும் ஊசி 
முனைகளாய்
வில் விடும் அம்புகளாய் 
பாய்ந்து
பிளந்து
வருகின்றன சுடு வார்த்தைகள் ..!!

வாசகங்களில்
வாழ்க்கை நெறி
புலப்படுகிறது....
சுடுதலின் சுவை
வாக்கியங்கள் ...!!

இன்னல் மறந்த
இறை வசனங்கள்

திட்டித் தீர்க்கின்றாய்
உன் உரிமைகள்
எனக்கானவை
திட்டல்கள் கூட
திகட்டாதவை...!!




திட்டித் தீர்க்கின்றாய்(-10 -)
(பாசச் சிறைகள்)

வெடி வெடியாய்
உதடுகள் விரித்து 
போர்க்கொடி 

உயர்த்துகின்றாய் ...


கொஞ்சல் திட்டல்களில்
கொலைகள்
செய்கின்றாய்
உன் மௌனத்தை
துண்டாக்கி
வார்த்தைகளை
வாழ வைக்கின்றாய் ...!!!

உள்ளே சிரித்து
வெளியே
எரிக்கின்றாய்
எரிதலில்
இன்ப ரணங்களாய்
உதிர்கின்றாய் ...!!!

திட்டித் தீர்க்கின்றாய்
திட்டல்களைத்
தீர்க்கின்றாய்
வாலிபத்தை
வார்க்கின்றாய்
கோபக் கனல் விழியால்
கவிதைகள் சேர்க்கின்றாய்

பாசம் தீப்பிடிக்கையில்
என்ன செய்வாய்
தீராத உன்
சுவாசத்தினால்
சிறைப்பிடித்து விடுவாயா?


திட்டித் தீர்க்கின்றாய்(-11 -)
(மிஞ்சலில் மிஞ்சல்)

காதல் கொள்ளும்
பொழுதுகளில் 
கர்சிக்கின்றாய்
காவல்மீறி என்னை
மிஞ்சல் மொழிகளால்
அர்ச்சிக்கின்றாய்

விரிந்த உன் விழிகளோரம்
ஒட்டி உறவாடும்
மனதை
பாதியாய் முறிக்கின்றாய்
ஏனடி
வார்த்தைகளைப்
பொரிக்கின்றாய்...??

திட்டித் தீர்க்கின்றாய்
மிஞ்சல்களை
மிளிரச் செய்கின்றாய்
மஞ்சள் முகத்தில்
வர்ணஜாலம்
அஞ்சல் செய்கின்றாய்

மிஞ்சலில் மிஞ்சல்
நீயாகின்றாய்
நெஞ்சிலே
கொஞ்சம் தீயாகின்றாய்...



திட்டித் தீர்க்கின்றாய்(-12 -)
(காதல் ஆத்மீகம்)

சொல்லாமல் கொள்ளாமல்
கொன்றுவிடுவாய் என்னை
மறுபடியும்
வார்த்தைகள் வெடித்து
உதிர்ந்து பூப்பாய் ...!!

சினத்தல்கள்
மொழிகளால் சீண்டுதல்
உயிர் உடைத்து
மௌனம் நடுதல்
சலனங்களில்
சங்கீதம் இசைத்தல் ....
உன் நெறிகள்

திட்டித் தீர்த்தல்
உன் சத்தம் உச்சம்
கொண்ட கவிதை-அதற்கு
மொழிகள் கிடையாது
மொழிதல் மட்டுமே உண்டு

திட்டித் தீர்த்தல்
யுகக் கனவு
மேன்மை உணர்வு
தெய்வீக முதிர்வு
நெறி பிறழ்வாக்
காதல் ஆத்மீகம் ...!!!




திட்டித் தீர்க்கின்றாய் (13)

(மௌனப் புசிப்பு)


உருண்ட விழிகளில் -என்
உலகை உருட்டி 
விருந்து செய்கின்றாய் 

சொற்காயம் கண்ட

உயிரில் புன்னகை

மருந்தைப் பெய்கிறாய் ...!!

காரணங்கள் கேளாது
கடைத் தெருவில்
பொம்மைகளும்
குழந்தையாய்
அடம் கொள்கின்றாய்
மீண்டும் தீ வளர்த்து
வதம் செய்கின்றாய்

உருக்கும் பார்வையில்
வறுக்கும் பாசையில்
திட்டித் தீர்க்கின்றாய்
வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
கவனமாய்-பெண்மையை
கட்டிக் காக்கின்றாய்..!!

திட்டித் தீர்க்கின்றாய்
ஆரோகணத்தில்
திட்டல் இசைக்கின்றாய்
அவரோகணத்தில்
மௌனம் புசிக்கின்றாய் ....!!







திட்டித் தீர்க்கின்றாய்(14)
(திட்டித் தீர்த்தாய் )

வானம் கற்பமுறும்
வேளையிலே 
மழைத்துளிகள் பிரசவிக்கும் 
உன் நாணம்
பிரசவிக்கும் தருணத்தில்
மௌனங்கள் ஜனனிக்கும்
திட்டல்கள் தீர்ந்துவிடும்

உள்ளம் இரும்பாக்கி
திட்டித் தீர்ப்பாய்
மறு நொடியே
வெல்லம் கரும்பாக்கி
இனிப்பாய் ..

மின்னி மின்னி ஒளிரும்
கண்களில்
மின்சாரிப்பாய்...
மின் மினிகள்
சிறை எடுத்து
காதலில் சஞ்சரிப்பாய் ...!!

திட்டித் தீர்த்தாய்
வெட்கம் மௌனம்
குழைத்தாய்
வானவில்லில்
தேன் தெளித்தாய் ..!!

காதல் வதை
செய்தது -நீள் கவிதை
கசிந்து ஒழுகியது ...!!



திட்டித் தீர்க்கின்றாய் (15 )
(திட்டல் மொத்தமும் தீர்ந்தது)

பெண்மையுன் கர்வம் 
அழிக்கும்-உன் 
வார்த்தையில் தர்மம் 
தளைக்கும்-காதலோ அன்
-றிறந்து பிழைக்கும்
திட்டல் தீர்ந்த உதட்டில்
புன்னகை வெளிக்கும் ...!!

சூட்டரவம் சுருண்டு படுக்கும்
பனித்துருவம்
உயிரில் தெறிக்கும் ...!!
வெந்நீரில் பன்னீர் கலக்கும்
அன்று
வெட்கங்கள் வெகுளித்தல்
பிறக்கும்..!!

திட்டல்கள் மொத்தமும்
தீர்ந்து போகும்-அன்று
மிட்டாய் மிகை இனிப்பு உன்
வார்த்தை சேர்க்கும்
சப்தஸ்வரங்களின் ஒலிநாண்
பிளந்து விழும் ....!!!
உன் எட்டாம் ஸ்வரம்
மௌனம் இசைக்கும் ...!!

பெண்ணே !
திட்டல் பொழுதுகள் ஆடிவரை
மிச்சப் பொழுதுகள் -மறு
பாதிவரை ....
காதல் பொழுதுகள் காலம் வரை ....!!

(முற்றிற்று)





திட்டித் தீர்க்கின்றாய் -16-
(ஒரு உயிர் ஒரு கண்ணீர் )

உயிரின் ஒவ்வொரு உடைசல் வழி
பிளந்து வருகின்றதுன் வார்த்தை
இதயத்தின் ஒவ்வொரு பாகங்களையும் 
கூறு போட்டுத் துளைக்கின்றதுன் பார்வை
முன்னால் வீழ்ந்த கூந்தலை
மின்னல் வேகத்தில் பின்னால் எறிந்து நீ
திட்டல் குறியானாய்
என் மனதை முறுக்கிக் கட்டிப் பந்தாக்கித்
தூர எறிந்தாய்

விரல்களை சொடுக்கி
உதடுகளை உருட்டி வார்த்தைகளில்
ஜீவிதம் கொண்டாய்
எனதுயிரே
குண்டடிபட்டுப் பிணாமாய் சாயும் என்னினம் போல்
உன் கோபத்தொனியினால் நின்றுகொண்டே
மெல்லச் சாய்கிறேன்

சந்தேகப் பொறி வரியால்
எரித்து விடுகின்றாய்
மந்தையில் மிதிபடும் மண்புழுப்போல்
துடித்துத் துண்டாகின்றேன் ,மேலும்
திட்டித்தீர்க்கின்றாய் இனி திட்டல்களல்ல

ஒரு உயிர் ஒரு கண்ணீர்
 

No comments:

Post a Comment