Sunday, February 3, 2013

இரண்டு கனவுகள்




இரவு 10.30

ஆழ்மைக்குள் அமிழ்ந்திறங்கிக்கொண்டிருந்தது 
அத்தகைய அமைதி தேடிய இரவு 
உடற்சுவடுகளற்றிருந்த மென்மை பொருந்திய
இரண்டாம் உலகின் முதலாம் அத்தியாயத்தில்
இறங்கிக்கொண்டிருந்தேன் 
இருளின் போர்வை களைந்து வெளித்தது 
அவளுருவம்,அத்தனை மரண இரவுகளும் 
அவள் உதடுகளின் பள்ளத்தில் இளைப்பாறிவிடும் 
நிழலில் அவள் உயிர்மை நிறைந்து 
வழிந்துகொண்டிருந்தது 
நான் அவளுக்குள் ஆழ்ந்திருந்தேன் ,பிரபஞ்சத்தின் 
அத்தனை நட்சத்திரங்களையும் மொத்தமாய்ப் போர்த்தியிருந்த 
குளிர் தாங்கா அவள் விழிகள் சிந்திய 
காதல் தோய்ந்த இழைகளிலிருந்து வீழ்ந்தான் 
நானின் குழந்தையாகிப் பின் இளைஞனான 
என்னின் கிழவன் ....

பின்னிரவு 1.30

கரியாக உறைந்தது விடியலின் நட்சத்திரம் 
பொழுது புலரா நொடியொன்றுடன் கூடிய 
மரணக்காற்று ஆரத்தழுவியது,
அவள் உதடுகள் வெடித்துப் புண்ணாகிச்சிதைந்தது 
விழிகளில் நஞ்சுறைந்த வஞ்சகம் 
நீலப்பற்கள் செறிந்த உடலில் துப்பாக்கியும் 
கோர்த்த அவள் சோதரரும் ...!!
நசுக்கப்பட்ட என் நாட்டில் மிச்சமாய் இருந்தது 
திரோயின் குதிரையின் படிமம் 
உலகம் கவிழ்ந்து வீழ்ந்து தலைகீழானது 
சேயின் முலையில் வாய்வைத்துறிஞ்சினாள் தாய் 
என் சோதரரே ..!!
வஞ்சக வயல்களில் நீர் விதைக்கப்பட்டிருந்தீர்

காலை 6.30

குப்பிவிளக்கொன்று வாங்க 
சூரியனை விற்றுக்கொண்டிருந்தேன் நான் ...!!

(பிற்குறிப்பு : கனவை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் 
கனவுகாணத் தகுதியற்றவர்கள் )
 

No comments:

Post a Comment