Monday, February 4, 2013

அனன்மியாவின் அழகான பொய்களும் அர்த்தமில்லா உண்மைகளும்


விண்மீன்கள் நடைபயிலும் வெள்ளை
இரவொன்றில்
குழந்தையானாய்-தேன் குழைத்த அப்பமென
நிலவைக் காட்டிப்
புன்னகைக்கக் கற்றுக்கொண்டாய்'
குட்டிச் சிலேட்டுக் குச்சிகளில் அழகுக் கிறுக்கல்களாயுன்
பெருமைகளை காட்சியிட்டாய்
அரைநாளில் வரைந்த ஓவியத்தை
இருநொடியில் கிழித்ததாய்..!!
நிஜங்களை நடிப்பதாய் சொல்கிறாய்-உன்
நாடகத்தை புரிந்து கொள்ள முடியாது செல்கிறேன்

கறுப்புப் புள்ளிகளை காட்டிப்
பேய் என்று நடுங்கித் தோளில் சாய்கிறாய்
நட்சத்திரங்கள் பத்தை தின்றுவிட்டு
வெள்ளை மரங்களுக்குள் ஒளிந்து கொள்ளும்
இரு தலைப் பச்சைக் காகமெனவும்...
இருந்தும் உன் பொய்கள் அழகானவை

உன்னிடமிருந்து அன்பைப் பற்றிய
வார்த்தைகள் வருவதில்லை-அதன் இலக்கணங்களே
நிரம்ப வருகின்றன ..!!
 

No comments:

Post a Comment