Saturday, December 22, 2012

என் பனித்துளியின் பல்லக்கு


யாழின் இழை வழியே 
வீழ்ந்த தேன் துளியில் 
அவரோகணிக்கின்றாய் 
உன் இசை புதிது 
அது என்னை இசைக்கின்றது 

பூக்களின் ஆடை
களைதலின் அந்தரங்கம் 
நீ-அத்தனையும் அழகு 
அமிர்தம் விழுங்கிய 
சொர்க்கமும் நானும் ..!!

அலைக்காற்று கரையை 
இழுப்பதைப் போல் 
உன் தாவணி என்னில் விழும் 
செத்தே விடுகின்றேன் 
மறுஜென்மத்தில் உனக்காய் 
மூச்சு விடுகின்றேன் 

நீ அழகிய ஜன்னல் 
தென்றல் எறிகின்றாய்
வெட்கச் சிறகு முளைத்த 
அன்றில் நீ ...
கவிதைகளை பார்த்து 
சிரிக்காதே தீர்ந்துவிடும் 

என் பனித்துளி நீ 
உன்னில் நான் உறைந்து 
விடவே பார்க்கின்றேன் 
பல்லக்கில் பயணப்படும் 
மரண ஊர்வலம் 
காதல்...!!

No comments:

Post a Comment