Saturday, December 22, 2012

அர்த்தமில்லாக் கவிதை (2)

உன்னை நீயே எழுதுகின்றாய் 
காயத்திலும் மருந்திலும் 
மாறி மாறி 
ஒவ்வொரு மனிதனும் 
மற்றவனின் 
மிகப்பெரிய பரீட்சை 

உன்னை நீ 
தொலைக்கின்றாய் 
தேடமுடியாமல் இறக்கின்றாய் 
ரசனை 
உன் கற்பனை 

உயிர் உன் செலவு 
மரணம் 
நீ படித்து முடிக்காப்
புத்தகம்...

உன்னைத் தூக்கித் தெருவில் 
போடு ...நீ என்பது உனக்கானதோ 
நான் என்பது எனக்கானதோ 
அல்ல-உலக யாசகத்தின் 
சில்லறைகள் நாம் 

மனிதன் உலகின் 
ஆடை தான் ஆடைகளுக்கு 
நிர்வாணம் ஏது...?
உன் மனதை நிர்வாணப்படுத்து 
கடவுள் புத்தாடையுடன் 
அங்கே தெரிவதைக் காண்பாய் 

உலகை நிர்வாணப்படுத்து 
உண்மை அங்கே 
பூப்பதைக் காண்பாய் 
நிர்வாணப்படுதல் அசிங்கமில்லை 
அது அழகுணர்ச்சியின் 
தொடக்கம் 

ஆடை களைகையில் தான் 
வெட்கம் பிறக்கின்றது 
தேடலில் 
எதுவும் கிடைப்பதில்லை 
கிடைத்தது என்ற 
மாயை தான் 
வாழ்க்கை ....!!!

உடல் சதையை 
நோக்கித் தேடத் தொடங்குகிறது 
உள்ளம் உள்ளிருந்து 
வெளிவர முயற்சிக்கிறது 

உனக்கு உள்ளேயும் 
வெளியேயும் 
கடவுளில்லை 
தேடினாலும் கிடைக்கப்போவதில்லை 

கடவுளை உனக்காய் 
கொண்டாடாதே -உனக்குள் 
கடவுளைக் கொண்டாடு

No comments:

Post a Comment