Sunday, February 3, 2013

மழையின் நீர்மையை சுமத்தல்




வாழ்ந்தொழிதல் பற்றிய கனவுடன் 
வீழ்கிறது நீர்த்துளி -சிறுவுயிர் ஒன்றின் 
சிறகுவழி ஒன்றி ஊறி நனைகிறது 
இலைகளின் நரம்புவழி ஒட்டிக்கொண்டே 
வேர்வரைப் படர்கிறது ஈரம் 
குளிக்க மறுக்கின்றது உயிரிழையின் 
மறுபாதி 
கூரையின் உடைசலில் சிந்தும் திண்மை 
அபரிமிதமானது -உடலைக் கிழித்து 
குளிர்ச்சியை சேர்த்து தைத்துவிடுதல்போல் 
துளிகள் ஒவ்வொன்றும் 
கிளிச்சிடும் சத்தத்துடன் உயிரில் விழும் 
என் வெப்பநாண்களை பற்றிக்கொண்டு 
மெலிதாய் ஊர்ந்து ஏறுகிறது 
சிரிப்பு ரேகைகள் 
கண்ணீர் செறிந்த ..எச்சில் உமிழ்ந்த 
அழுக்குகள் சேர்ந்த வாழ்வின் நிறங்களின் 
சுவடழிந்து போன இடங்களிலெல்லாம் 
ஆழ இறங்கிய நீர்மையில் ஒட்டிக்கொள்கின்றன 
நிழல் நசுங்கிய மனங்கள் .
சோர்விழந்த நீரின் மறுதுளி வீழ்கிறது 
ஆவி எங்கெங்கோ அலைதல் கொண்டு 
கவிதைக்குள் அடங்கிப்போகிறது ..!!

No comments:

Post a Comment