Sunday, September 30, 2012


துளியோடு இசைகின்றாய் ............

மணற்றரைகள் 
உப்பிக்கொள்ளும் 
கிணற்றுத்தவளைகள் 
கொலுசொலிக்கும் ஓர் 
மழைப்பொழுதில் நீ 
வந்துகொண்டிருந்தாய்

அந்தக் குளிர் வெளியில் 
நனைந்தது -நீ மட்டுமல்ல 
என் இதயமும் தான் 
தளிர் மேல் தவமிருந்த 
நீர்க்குமிழி ஒன்றில் 
ஆயிரமாயிரம் விம்பங்களைத் 
தெளித்தாய் 

மேகத்தின் மோகம் விடுத்தது 
அறுந்துவிழும் நீரிழைகளில் 
உன் புன்னகை 
கொர்த்துக்கொண்டாய்
மழையீரம் ... சொட்டியது 
உன் பாவாடை மட்டுமல்ல 
பார்வைகளும் தான் 

மீண்டும் மழை ஓய்ந்தது 
வெள்ளத்தில் கப்பல் விடும் 
மழலையைப் போல் 
உன் குதூகலங்கள் என்னில் 
ஒட்டிக்கொண்டது 

துளியோடு இசைகின்றாய் 
நீ-துளித் துளியாய் 
உடைகின்றேன் நான் ...!!

No comments:

Post a Comment